கோவில் பூசாரி வீட்டில் 25 பவுன் நகை - ரூ.5 லட்சம் கொள்ளை


கோவில் பூசாரி வீட்டில் 25 பவுன் நகை - ரூ.5 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கோவில் பூசாரி வீட்டில் மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் கோவில் பூசாரி வீட்டில் மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.

மகளுக்கு 7-ந்தேதி திருமணம்

ராமநாதபுரம் புளிக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளி கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரின் மூத்த மகள் அபிநயாவிற்கு வரும் 7-ந் தேதி திருமணம் நடந்த ஏற்பாடுகள் செய்திருந்தார். மகளின் திருமணத்திற்கு தேவையான நகைகளை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மனோகரன் கோவிலில் பூஜைக்கு சென்று விட்டாராம். அவரின் மனைவி திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியில் சென்று உள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் திருமண விழாவுக்கு துணி தைப்பதற்காக வெளியில் சென்றிருந்தார்களாம். இதனால் வீடு பூட்டி இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 23½ பவுன் நகைகள், ஒரு வைர மூக்குத்தி, ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நகை, பணம் கொள்ளை

கோவிலில் இருந்து வந்த பூசாரி மனோகரன், வீட்டுக்கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணம், நகை கொள்ளை போனதால் அந்த குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.


Next Story