கோடையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்: விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்த்தனர்


கோடையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்: விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்த்தனர்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. 3 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. 3 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 24,800 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

தொடர் விடுமுறை

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சவாரி செய்து பார்வையிட்டு வருகின்றனர். இவற்றை பார்வையிட செல்வதற்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதிகை படகு பராமரிப்பு பணிகள் முடிந்து வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது. இதனால் தற்போது விவேகானந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் அலைமோதியது

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி தமிழ்புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தொடர் விடுமுறை விடப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண படகில் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வந்தனர்.

24,800 சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 24 ஆயிரத்து 800 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

அதன்படி தமிழ்புத்தாண்டான 14-ந் தேதி 7ஆயிரத்து 400 பேரும், 15-ந்தேதி சனிக்கிழமை 8 ஆயிரத்து 600 பேரும், 16-ந்தேதியான நேற்றுமுன்தினம் 8 ஆயிரத்து 800 பேர்கள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் கோடை சீசன் களைக்கட்டி உள்ளது.


Next Story