தேரை நிறுத்தி, இயக்க 250 வாகைமர முட்டுக்கட்டைகள் தயார்


கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது. தேரை நிறுத்தி, இயக்க 250 வாகைமர முட்டுக்கட்டைகள் தயாராக உள்ளன.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது. தேரை நிறுத்தி, இயக்க 250 வாகைமர முட்டுக்கட்டைகள் தயாராக உள்ளன.

சாரங்கபாணி கோவில் தேர்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடக்கும். சாரங்கபாணி கோவில் தேர், திருவாரூர் ஆழித்தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு இணையான சிறப்புகளை பெற்றது.

சாரங்கபாணி தேரின் அடிப்பாகம் 25 அடி அகலம், மேல் தட்டு 35 அடி அகலம், உயரம் 30 அடி ஆகும். தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

தேரோட்டம்

தேரில் சாமி அலங்காரமாக வீற்றிருக்க மேள தாளங்கள், வாண வேடிக்கை, பக்தர்களின் கோஷம், கலைநிகழ்ச்சிகள் நடக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதிகளில் தேர் அசைந்தாடி வரும் அழகு காண கண் கொள்ளாத காட்சியாக இருக்கும்.

இத்தகைய சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தேரோட்டத்தின் போது தேரை இயக்கவும், நிறுத்தவும் பயன்படுத்தப்படும் முட்டுகட்டைகளான வாகை மர கட்டைகள் ஆகும்.

வாகைமர முட்டுக்கட்டைகள் தயார்

இந்த நிலையில் சாரங்கபாணி கோவில் தேரோட்டத்துக்கான வாகைமர முட்டுக்கட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வாகைமர முட்டுக்கட்டை தயார் செய்யும் முருகேசன் கூறுகையில்:- எனக்கு வயது 64. நான் கடந்த 18 வருடமாக இந்த தொழிலை செய்து வருகிறேன். சாரங்பாணி கோவில் தேரோட்டத்துக்கான வாகைமர முட்டுக்கட்டைகளை 12 வருடமாக செய்து கொடுத்து வருகிறேன்.

சாரங்கபாணி கோவில் தேர் மிகவும் பிரமாண்ட தோற்றத்தை கொண்டது. இதனை கட்டுப்படுத்த பெரிய மற்றும் முறையான வாகைமர முட்டுக்கட்டைகள் தயார் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

250 கட்டைகள்

கடந்த 15 நாட்களாக வாகைமர முட்டுக்கட்டைகளை செய்யும் பணி நடக்கிறது. வாகை கட்டை 12 இன்ச் உயரம், 10 இன்ச் அகலத்திலும், ஒன்றரை அடி நீளத்திலும் செய்யப்படுகிறது. ஒரு முட்டுக் கட்டையின் எடை 25 முதல் 30 கிலோ இருக்கும்.

தேர் நிலையில் இருந்து தேர் வீதிகளில் சென்று மீண்டும் தேர் நிலையை அடைவதற்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட முட்டுக்கட்டைகள் தேவைப்படும். அதன்படி தற்போது சாரங்கபாணி கோவில் தேரோட்டத்துக்்காக 250 வாகை கட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Next Story