காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
அறந்தாங்கி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்திக்கொண்டு செல்லப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அந்த மூட்டைகளை விற்பனைக்காக கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி சென்ற அறந்தாங்கி அருகே சின்னவயல் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 27), முகமது அப்துல்லா (25), அமீர் (22) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து 250 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.