போலீஸ் உடற்தகுதி தேர்வில் 250 பேர் தேர்ச்சி
சேலத்தில் 2-வது நாளாக நடந்த போலீஸ் உடற்தகுதி தேர்வில் 250 பேர் தேர்ச்சி பெற்றனர்.
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.
அதன்படி சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த உடற்தகுதி தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 955 பேர் பங்கேற்றனர். இதில் 272 பேர் தேர்வாகி அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.
250 பேர் தேர்ச்சி
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் உடற்தகுதி தேர்வு நடந்தது. இதற்காக 352 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 296 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளவீடு மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது. வாலிபர்கள் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர்.
முடிவில் 250 பேர் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 46 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்த தேர்வை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் கண்காணித்தனர். 3-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.