ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2,500 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்
ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2,500 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசம்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே 2,500 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தன
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). இவர் தனது விவசாய நிலத்தில் அறுவடை செய்த 2,500 வைக்கோல் கட்டுகளை வீட்டின் எதிர்புறத்தில் அடுக்கி வைத்திருந்தார்.
மேலும் வைக்கோல் வீணாகாமல் இருப்பதற்காக அதனை தார்ப்பாய் மூலம் மூடி வைத்திருந்தார்். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரே அடுக்கி வைத்திருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தன.
தீயணைப்பு வீரர்கள்
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கணேசன் ஆகியோர் உடனடியாக இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் வைக்கோல் கட்டுகள் அதிகமாக இருந்ததால் தீைய அணைக்க முடியவில்லை.
12 மணி நேரம் போராடி அணைத்தனர்
இதனால் வாய்மேடு, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலைய நிலையங்களில் இருந்து வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இந்த வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று நண்பகல் வரை 12 மணி நேரம் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் கட்டுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.