புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 500 பஸ்கள் வாங்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 500 பஸ்கள் வாங்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி.மாநாடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளனத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) மாநாடு திருச்சியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலை பொதுமாநாடு நடைபெற்றது. சம்மேளன தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சுப்பராயன் எம்.பி. தொடக்கவுரையாற்றினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசும் போது, தமிழகத்தில் பல லட்சம் மாணவர்களை நீங்கள் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி விடுகிறீர்கள். இதற்காக உங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதிதாக 2,500 பஸ்கள் வாங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி பணிமனையை நவீனமயமாக்க முயற்சி செய்யப்படும். ஓட்டுனர் பயிற்சி மையம் நவீன முறையில் அமைத்து தரப்படும். அரசு உங்களுக்கு துணையாக இருக்கும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
கருத்தரங்கு
மாலையில் பொதுச் செயலாளர் டி. எம். மூர்த்தி தலைமையில் பயணிகள் போக்குவரத்து - எதிர்காலம் ' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பேசும்போது, தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்கனவே நஷ்டத்திலும், கடனிலும் இயங்கி வருகிறது. ஆனாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி நகரப் பேருந்துகளில் இலவச பயணத்தை அளித்து வருகிறோம். பெண்கள் இலவச பயண திட்டத்துக்கு முன்பு அரசு பேருந்துகளில் 40 சதவீத பெண்கள் பயணித்தனர். தற்போது, 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்துக்கழகமும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிற்சங்க கூட்டு இயக்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார் என்றார்.
இதில் தொழிலாளர் முற்போக்கு சங்க நிர்வாகிகள் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.