251 கி.மீ. தூரம் தூர்வாரும் பணிகள் நிறைவு


251 கி.மீ. தூரம் தூர்வாரும் பணிகள் நிறைவு
x

தஞ்சை மாவட்டத்தில் 251 கி.மீ. தூரம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 251 கி.மீ. தூரம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தூர்வாரும் பணி

ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு பாசன வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படுவது வழக்கம். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டும் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளன. நீர்வளத்துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொக்லின் எந்திரங்களை கொண்டு தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும், தஞ்சை பைபாஸ் சாலையில் அன்னப்பன்பேட்டை அருகே உள்ள ரகுந்த காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு வடிகால், ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன. இப்பணிகள் 189 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அனைத்து நீர் வளத்துறைக் கோட்டங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பணிக்கும் வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்பட்டு, அதில் அந்தந்த பகுதி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

251 கி.மீ. தூரம் பணிகள் நிறைவு

இப்பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடப்படுகிறது. தற்போது, 251 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது, கிட்டத்தட்ட 25 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மே மாத முதல் வாரத்தில் பெய்த மழையால், தூர் வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மழை இல்லாததால், முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளில் 124 பொக்லின் எந்திரங்கள் உள்பட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பணிகள் விரைவாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதே நிலைமையில் தட்பவெப்ப நிலை நீடித்தால், ஏ பிரிவு வாய்க்கால்களில் வருகிற 31-ந் தேதிக்குள் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர்கள் இளங்கோ (காவிரி), மதன சுதாகர் (வெண்ணாறு), பவளக்கண்ணன் (கல்லணைக் கால்வாய்), உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், மலர்விழி, சீனிவாசன், உதவி பொறியாளர்கள் சபரிநாதன், சேந்தன், ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story