சரக்கு ரெயிலில் 2,518 டன் உர மூட்டைகள் வந்தன


சரக்கு ரெயிலில் 2,518 டன் உர மூட்டைகள் வந்தன
x

சம்பா சாகுபடிக்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 518 டன் உர மூட்டைகள் புதுக்கோட்டைக்கு வந்தன.

புதுக்கோட்டை

சம்பா சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாகும். பருவ மழையை நம்பியே விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இதுதவிர கிணற்று பாசனம், ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்டவை உள்ளது. இந்த நிலையில் குறுவை முடிந்து சம்பா நெல் சாகுபடி தொடங்குகிற நிலையில் மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் இதுதொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையிட்டிருந்தனர். தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

உர மூட்டைகள்

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நேற்று யூரியா, டி.ஏ.பி., காம்பளக்ஸ் உள்ளிட்ட உர மூட்டைகள் வந்தன. இதில் 21 வேகன்களில் ஆயிரத்து 318 டன் உர மூட்டைகள் கூட்டுறவு சங்கங்களுக்கும், 1,200 டன் உர மூட்டைகள் தனியார் நிறுவனத்திற்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 518 டன் உர மூட்டைகள் வந்தன.

இதில் கூட்டுறவு சங்கங்களுக்கு வந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தனியார் நிறுவனத்திற்கு வந்த உர முட்டைகள் குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த உரங்கள் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story