கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 256 பேர் எழுதினர்


கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 256 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 256 பேர் எழுதினர்.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை 256 பேர் எழுதினர்.

எழுத்து தேர்வு

நீலகிரி மாவட்ட வருவாய்த்துறையில் ஊட்டியில் கிராம நிர்வாக உதவியாளர் 4 பேர், கோத்தகிரியில் ஒருவர், பந்தலூரில் ஒருவர் என 3 தாலுகாக்களில் 6 கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டனர். தொடர்ந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்டது.

373 பேர் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக ஊட்டியில் ரெக்ஸ் பள்ளி, கோத்தகிரியில் அரசு மேல்நிலை பள்ளி, பந்தலூரில் அரசு மேல்நிலை பள்ளி என 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதனால் காலை முதலே தேர்வர்கள் மையங்களுக்கு வர தொடங்கினர். 3 மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது. ஹால் டிக்கெட்டை சரிபார்த்த பின்னர் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஊட்டியில் நடந்த தேர்வை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆர்.டி.ஓ. துரைசாமி உடனிருந்தார். கோத்தகிரி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை குன்னூர் ஆர்.டி.ஓ. புஷ்ணகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விடைத்தாள்கள் சீல் வைக்கும் பணியை பார்வையிட்டார். ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தனி தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் அருண் உடனிருந்தனர்.

117 பேர் வரவில்லை

ஊட்டியில் 301 பேர், கோத்தகிரியில் 38 பேர், பந்தலூரில் 34 பேர் என மொத்தம் 373 பேர் விண்ணப்பித்தனர். ஊட்டியில் 203 பேர், கோத்தகிரியில் 29 பேர், பந்தலூரில் 24 பேர் என மொத்தம் 256 பேர் தேர்வு எழுதினர். 117 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Next Story