260 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை


260 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 260 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 260 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள்

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை புதுப்பித்து வழங்கும் முகாம் நாகா்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் பி.என்.ஸ்ரீதர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஆண்டு தோறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கும் இருப்பிடத்தில் இருந்து கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள் படிக்கின்ற நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரிவோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வோருக்கு, மருத்துவமனைக்கு செல்வதற்கும் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது நடந்த முகாமில் 260 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 5 பார்வை குறைபாடுள்ள மாணவ-மாணவிகளுக்கு பார்வை கண்ணாடிகள் வழங்கப்பட்டு உள்ளது.

தேசிய அடையாள அட்டை

இந்த முகாமானது இன்று (புதன்கிழமை) தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கு நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 31-ந் தேதி விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும் ஏப்ரல் 1-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் இலவச பயண பஸ் அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இலவச பயண பஸ் அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் முகாமிற்கு வரும்போது ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடனும், தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவதற்கான அசல் சான்று, சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று, தினசரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறப்படும் அசல் சான்றுடன் வரவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவையும் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story