போக்குவரத்து விதி மீறல்: நாகர்கோவிலில் ஒரே நாளில் 267 பேருக்கு அபராதம்


போக்குவரத்து விதி மீறல்: நாகர்கோவிலில் ஒரே நாளில் 267 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 267 பேருக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில், ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 267 பேருக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

47 கனரக வாகனங்கள் பறிமுதல்

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமாி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து ஆய்வு நடத்தினார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், 47 கனரக வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் 200-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் கட்டாயம்

மேலும் நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறும் இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், 3 பேர் பயணம் செய்தவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பயணம் செய்தது என 71 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 42 பேருக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரே நாளில் 267 பேருக்கு அபராதம்

இதுதவிர வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 21 இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் இரும்பு சங்கிலி மூலம் பூட்டு போட்டு பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டெம்போக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்கள்.

இதன்மூலம் நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 267 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.


Next Story