26-வது குருமகா சன்னிதானத்தின் 3-ம் ஆண்டு குருபூஜை விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 26-வது குருமகா சன்னிதானத்தின் 3-ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக இருந்த சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கடந்த 2019-ம் ஆண்டு சித்தியடைந்தார். அவர் சித்தியடைந்து 3-ம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆனந்த பரவசர் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், குருமூர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், சந்தனம், அன்னம், விபூதி உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை செய்து வைத்தார். அதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஓதுவா மூர்த்திகளுக்கு பட்டங்கள் வழங்கி அருளாசி கூறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.