மணம்பூண்டியில் 27 செ.மீ. மழை பதிவானது
விழுப்புரம் மாவட்டத்தில் இடி- மின்னலுடன் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக மணம்பூண்டியில் 27 செ.மீ. மழை பதிவானது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
விழுப்புரம்:
வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி- மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான சுதாகர் நகர், வீனஸ் நகர், கணேஷ்நகர், கே.கே.நகர், மணிநகர், பாண்டியன் நகர், ஆசிரியர் நகர், கமலா கண்ணப்பன் நகர், வள்ளலார் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீடுகளில் இருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர்.
பஸ் நிலையத்தில் தேங்கிய தண்ணீர்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி கழிவுநீர், மழைநீருடன் கலந்ததால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் அனைவரும் பஸ் நிலைய நுழைவுவாயிலின் அருகில் நின்றுகொண்டு பஸ்சில் ஏறிச்சென்றனர். பின்னர் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் அந்த தண்ணீரை வெளியேற்றினர்.
விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானங்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
ரெயில்வே சுரங்கப்பாதையில்...
இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. அந்த தண்ணீரை வெளியேற்றக்கூடிய மின் மோட்டார் பழுதாகி 6 மாதங்கள் ஆகியுள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து கீழ்ப்பெரும்பாக்கம், காகுப்பம், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு புதுச்சேரி சாலை, கல்லூரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
கோவில் மீது விழுந்த மரம்
விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள ராட்சத ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் விழுந்தது. இதில் அந்த கோவிலின் சுவர் உடைந்து சேதமடைந்தது.
காணை, காங்கியனூர், அகரம்சித்தாமூர், வாழப்பட்டு, சூரப்பட்டு, கெடார், அன்னியூர், பிடாகம், கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. அதுமட்டுமின்றி பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை மழை ஓய்ந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று அறுந்து கிடந்த மின் வயர்களை சரிசெய்து சீரான மின் வினியோகம் வழங்கினர்.
விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டு கிராமத்தில் கோவிந்தப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிப்பட்டிருந்த 100 பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது.
வாகன போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் மாம்பழப்பட்டு அருகில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் பணியையொட்டி அதன் அருகில் வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மண் சாலை அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையினால் அச்சாலையில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் வரும் வாகனங்கள் அனைத்தும் மாம்பழப்பட்டில் இருந்து கெடார், சூரப்பட்டு வழியாக விழுப்புரம் திருப்பி விடப்பட்டது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் சித்தாமூர், கெடார் வழியாக சென்றன. நேற்று காலை மழை ஓய்ந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாம்பழப்பட்டுக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டி அங்கு தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். அதன் பிறகு அப்பகுதியில் வாகன போக்குவரத்து சீரானது.
கண்டாச்சிபுரம்
கண்டாச்சிபுரம் மற்றும் மணம்பூண்டி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மணம்பூண்டி, ஆலம்பாடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் மின்வினியோகம் செய்தனர்.
தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுபாலம்
ஒடுவன்குப்பம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் கண்டாச்சிபுரம்-ஒடுவன்குப்பம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிறுபாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், நாராயணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று உடைந்த சிறுபாலத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கு போக்குவரத்துக்கு தற்காலிகமாக மாற்றுவழி ஏற்பாடு செய்தனர்.
மழைநீரில் மூழ்கிய பொக்லைன் எந்திரம்
காடகனூர் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரம், மழைநீரில் மூழ்கியது. மேலும் குளத்தில் இருந்து வெளியேறி மழைநீர் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான குருகுலத்தில் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மழையின் பாதிப்பை பார்வையிட்டனர்.
ஒரே நாளில் நிரம்பிய குளம்
ஒரே இரவில் பெய்த மழையால் திருக்கோவிலூர் பெரிய ஏரி, கனகநந்தல் கிராமத்தில் உள்ள பெரியகுளம் நிரம்பியது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் அதிகபட்சமாக மணம்பூண்டியில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
..........
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணம்பூண்டி- 273
சூரப்பட்டு- 214
முகையூர்- 203
கெடார்- 150
முண்டியம்பாக்கம்- 83.50
மரக்காணம்- 64
விழுப்புரம்- 62
அனந்தபுரம்- 60
வானூர்- 39
கோலியனூர்- 36
கஞ்சனூர்- 36
செஞ்சி- 33
நேமூர்- 33
வளத்தி- 31
வளவனூர்- 26
வல்லம்- 16
செம்மேடு- 12
திண்டிவனம்- 8.30
அவலூர்பேட்டை- 3.40
அரசூர்- 1
திருவெண்ணெய்நல்லூர்- 1