27 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


27 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
திருப்பூர்


திருப்பூர் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் கூறியதாவது:-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறோம். மாநகர சுகாதார அதிகாரிகள் குழு தொடர்ந்து மாநகரில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஓட்டல்கள், உணவகங்களில் பிளாஸ்டிக் பையை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் மஞ்சள் பை உபயோகப்படுத்துவதை மக்களிடம் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

மாநகராட்சி, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை இணைந்து மாநகர பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்தி வருகிறோம். வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மாநகர பகுதியில் 27 டன் எடையுள்ள தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். அதை விற்பனை மற்றும் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து அவற்றை சிமெண்டு தயாரிக்கும் ஆலைக்கு மொத்தமாக அனுப்பி வைத்துள்ளோம்.

திருப்பூர் மாநகருக்கு ஈரோட்டில் இருந்து பார்சல் லாரிகள் மூலமாக தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் குவளைகள், பைகள் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டு வந்ததை தொடர் ஆய்வு மேற்கொண்டு 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. டன் கணக்கில் மொத்த, மொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறைந்து வருகிறது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மண்டலம் வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வணிகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story