விருத்தாசலத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 27 பன்றிகள் பிடிபட்டன எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


விருத்தாசலத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 27 பன்றிகள் பிடிபட்டன  எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x

விருத்தாசலத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 27 பன்றிகள் பிடிபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்றி உரிமையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகரில் பொது மக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிந்து வந்தன. இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று விருத்தாசலம் நகராட்சி அதிகாரிகள், பன்றி வளர்ப்பவர்களுக்கு நோட்டீசு வழங்கினர். ஆனால் அவர்களோ அதனை கண்டு ெகாள்ள வில்லை. இதையடுத்து நகராட்சி சார்பில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பன்றிகளை பிடிப்பதற்காக மதுரையில் இருந்து 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று விருத்தாசலத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

27 பன்றிகள் பிடிபட்டன

இந்த குழுவினர், இந்திராநகரில் உள்ள குடியிருப்புகளில் சுற்றித்திரிந்த 27 பன்றிகளை பிடித்து, நகராட்சி வாகனங்களில் ஏற்றினர். இது பற்றி அறிந்ததும் பன்றி வளர்ப்பவர்கள் ஒன்று திரண்டு வந்து, பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து, பன்றிகளை பிடித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த இந்திரா நகர் பகுதி மக்கள், பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க பன்றிகளை வளர்ப்பவர்கள் முறையாக வளர்க்க வேண்டும். அதனை விட்டுவிட்டு திறந்தவெளியில் பொதுமக்களுக்கு இடையூறாக வளர்க்கக்கூடாது, மேலும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கூறினர்.

வாக்குவாதம்

இதனால் பன்றி வளர்ப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பன்றி வளர்ப்பவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக வந்த உள்ளாட்சி பிரதிநிதிகளையும் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.

இது பற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகள் பிடிக்கும் பணி நடைபெற்றது.

இதனிடையே நகராட்சி ஆணையாளர் சேகர், சம்பவ இடத்துக்கு சென்று பன்றிவளர்ப்பவர்களிடம், 3 நாட்களுக்குள் பன்றிகளை நீங்களே அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் நகராட்சி சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவோம். மேலும் அந்த பன்றிகள் திருப்ப ஒப்படைக்கபடமாட்டாது. அதுமட்டுமின்றி பன்றி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story