27,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரையில் தனியார் மில்களில் திடீர் ஆய்வு செய்து 27,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் தனியார் மில்களில் திடீர் ஆய்வு செய்து 27,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை கோட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியாவிற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மதுரை கரிசல்குளம், பனையூர் மற்றும் அனுப்பானடி ஆகிய இடங்களில் உள்ள தனியார் மில்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கரிசல்குளத்தில் சுமார் 8,500 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசியும், பனையூர் தனியார் மில்லில் சுமார் 14,000 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசியும், அனுப்பானடியில் உள்ள தனியார் மில்லில் சுமார் 4,700 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசியும் என மொத்தம் 27,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஒருவர் கைது
மேலும் போலீசார் பனையூரில் இயங்கி வரும் மில்லினை நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். இதுதவிர மற்ற இரண்டு மில்களுக்கும் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு துணையாக இருந்த மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, செல்வம் கண்ணாயிரமூர்த்தி என்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மில்களில் வாங்கப்படும் ரேஷன் அரிசியானது கோழி மற்றும் மாட்டு தீவனத்திற்காக அரைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிய வருகிறது. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். மேலும் இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மற்றும் அரிசி ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியா எச்சரித்துள்ளார்.