கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 276 மனுக்கள் குவிந்தன
கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 276 மனுக்கள் குவிந்தன.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைள் தொடர்பாக 276 பேர் தங்களின் மனுக்களை கலெக்டர் சரயுவிடம் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ரூ.17 ஆயிரம் மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஈமச்சடங்கு நிதியுதவியும், தலா ரூ.14 ஆயிரம் வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான திறன் பேசிகள் என மொத்தம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.