ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 28 பேர் காயம்


மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 28 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் தண்ணீர் குடம் எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் அடக்க முயன்றனர். இதனை கண்டு பார்வையாளர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பினர்.

28 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் 574 காளைகளும், 250 வீரர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து, வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் எல்.இ.டி. டி.வி., கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், ரொக்கப்பணம் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 28 பேர் காயமடைந்தனர்.

போட்டியில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

2½ பவுன் நகை, செல்போன் ஒப்படைப்பு

நேற்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் 2½ பவுன் மதிப்புள்ள நகையை தவற விட்டுவிட்டார். உடனே அந்த நகையை எடுத்தவர்கள் மேடையில் உள்ள விழா குழுவினரிடம் ஒப்படைத்தனர். விழா குழுவினரும் சம்பந்தப்பட்ட நபர் நகையின் விவரத்தை சொல்லி பெற்றுக்கொள்ளலாம் என்ற போது சம்பந்தப்பட்டவர் நகையை வந்து வாங்கிச் சென்றார். இதேபோல் செல்போன் ஒன்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நின்று விளையாடிய காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் 574 மாடுகள் அவிழ்க்கப்பட்ட போதும் பெரும்பாலான காளைகள் வாடிவாசல் அருகே தன்னை பிடிக்க வந்த வீரர்களை விரட்டி அடித்து சிறிது நேரம் நின்று களத்தையே அதிர வைத்தது. காளை நின்று விளையாட, காளையர்கள் அதை அடக்க முயற்சிக்க, வர்ணனையாளர் வசீகர குரலில் வர்ணிக்க பார்வையாளர்களின் ஆரவாரம் என ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தின் வெள்ளத்தில் மிதந்தது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்ஸ்பெக்டர்

ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணியை கடந்த போது 5 காளைகள் அவிழ்க்க முடியாத நிலையில் தனியாக இருந்தது. இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி காளையின் உரிமையாளர்கள் நின்று கொண்டிருப்பதை அறிந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த 5 காளைகளின் ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்த பின்பு அதையும் களத்திற்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டரின் மனிதாபிமான செயல் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.


Next Story