குரூப்-4 தேர்வை 28,960 பேர் எழுதுகின்றனர் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 28 ஆயிரத்து 960 பேர் எழுதுகின்றனர். தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 28 ஆயிரத்து 960 பேர் எழுதுகின்றனர். தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டி தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வை திருப்பத்தூர் தாலுகாவில் 56 தேர்வு மையங்களில் 16 ஆயிரத்து 440 பேரும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 14 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 520 பேரும், வாணியம்பாடி தாலுகாவில் 18 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 760 பேரும், ஆம்பூர் தாலுகாவில் 10 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 240 நபா்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 960 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
பறக்கும் படை
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இத்தேர்வில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், 2 சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், துணை கலெக்டர் அளவிலான 5 பறக்கும் படையும், 28 நடமாடும் குழுக்கள், 98 தேர்வு மைய ஆய்வு செய்யும் அலுவலர்கள், 118 காவலர்கள், தலைமை கண்காணிப்பாளர் 98 அலுவலர்கள் என மொத்தம் 458 பேர் பணிப்புரிய உள்ளனர்.
தேர்வு கூடங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு கூடத்திற்குள் வர வேண்டும். டிஜிட்டல் கடிகாரம், ஸ்மார்ட் கடிகாரம், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு கூடத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் ெசய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு அலுவலர் மைதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.