போக்குவரத்து விதிமீறியதாக ரூ.29 லட்சம் அபராதம்
கோத்தகிரியில் கடந்த 3 மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் கடந்த 3 மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போக்குவரத்து விதிமீறல்
கோத்தகிரி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பகுதியில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.29 லட்சம் அபராதம்
நேற்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் 56 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றவருக்கு ரூ.1,500, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 32 பேருக்கு ரூ.32 ஆயிரம், சீட் பெல்ட் அணியாமல் சென்ற 20 பேருக்கு ரூ.20 ஆயிரம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியவருக்கு ரூ.5 ஆயிரம், இன்சூரன்ஸ் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற வாகன ஓட்டுனருக்கு ரூ.2,500 என மொத்தம் ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று வரை 3 மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.