290 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் உள்ள 290 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
இது தவிர பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால், இதனை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சீரமைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலத்தின் போது, மீனவர்களின் விசைப்படகுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து அவைகள் மீன்வளத்துறை சட்டத்திற்கு உட்பட்டு உள்ளதா என பார்ப்பது வழக்கம்.
290 விசைப்படகுகள்
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 290 விசைப்படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கடலூர் மண்டல மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடலூர் துறைமுகம், அன்னங்கோவில், முடசல் ஓடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படகுகள் நிர்ணயிக்கப்பட்ட நீளம் மற்றும் அகலம் உள்ளதா என்றும், என்ஜின்களின் குதிரை திறன் குறிப்பிட்ட அளவிற்குள் உள்ளதா என்றும், ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் உபகரணங்கள் வைத்திருக்கின்றனரா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் படகுகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் பட்சத்தில், அவைகளுக்கு மீன்பிடி அனுமதி வழங்கப்படாது என்றும், அதனை நிவர்த்தி செய்த பின்பு தான் அனுமதி வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பைபர் மற்றும் நாட்டுமர படகுகள் மட்டும் மீன்பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.