மக்கள் நீதிமன்றத்தில் 2904 வழக்குகள் தீர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2904 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) இருசன் பூங்குழலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.
இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு குற்றங்களை சார்ந்த 5 ஆயிரத்து 997 வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
இதில் 2904 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.21 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 401 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.