தூத்துக்குடியில் 2-வது நாளாக 'சாகர் கவாச'் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தூத்துக்குடியில் 2-வது நாளாக வெள்ளிக்கிழமை ‘சாகர் கவாச’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக நடந்த 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்குள் ஊடுருவ முயன்ற 11 பேரை கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஒத்திகை
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் 'ஆபரேசன் சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று திறம்பட செயல்பட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் தூத்துக்குடிக்கு நுழைய முயன்ற 21 பேரை கைது செய்தனர்.
2-வது நாளாக
நேற்று 2-வது நாளாக 'சாகர் கவாச'் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் படகுகளில் கடலுக்குள் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக வந்த 2 படகுகளை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த படகுகளில் இருந்த 11 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து ஊடுருவ முயன்றது தெரியவந்தது. அவர்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் வான் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் பகுதியிலும் ஊடுருவ முயன்றது தெரியவந்தது. பின்னர் 11 பேரையும் கைது செய்தனர்.