ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் தொடர்புடைய 25 இடங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடந்தது. இதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கந்தசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆர்த்தி ஸ்கேன் மையம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த 7-ந்தேதி காலை இந்த நிறுவனத்தின் தொடர்புடைய 25 இடங்களில் 200 வருமானவரித்துறை அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வரி ஏய்ப்பு ஆவணங்கள்
முதல் நாள் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை தொடர்ந்து, அதுதொடர்பாக விசாரணை மற்றும் சோதனை நடத்துவதற்காக, அந்த நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் கொள்முதல் செய்த கருவிகள் விவரம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிய கணக்கு பட்டியல், முதலீடுகள் குறித்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இனங்களில் வரி ஏய்ப்பு செய்ததற்கான குறிப்புகள் அடங்கிய ஆவணங்களும் கிடைத்து உள்ளது.
அறிக்கை தயாரிக்கும் பணி
நிறுவனத்தின் வரவு, செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து விவரங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை சிக்கி உள்ளன. இரண்டாவது நாளில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சோதனைக்கு பின் அனைத்து விவரங்களும் தெரியவரும்.
இதுதொடர்பாக முதல்கட்ட அறிக்கை பெறப்பட்டு உள்ளது. சோதனையின் போது கிடைத்த ரொக்கம், தங்கம் விலை உயர்பொருள்கள், ஆவணங்கள் அடிப்படையில், நிறைவு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கணக்கில் காட்டப்படாத, முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரொக்கம், தங்கம், விலை உயர்ந்த பொருள்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது. இவற்றை முறையாகப் பட்டியலிட்டு முத்திரைக் கையெழுத்துடன் ஒரு பிரதி நிறுவன உரிமையாளருக்கு வழங்கப்படும். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. தேவைப்பட்டால் சோதனை தொடரவும் செய்யலாம்.
மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.