2-ம் நாளாக கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2-ம் நாளாக கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.
இதை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவிலை சுற்றியுள்ள ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்கள் சுத்தம் செய்யும் நேற்று தொடங்கியது.
இதற்காக தீயணைப்பு துறையின் சென்னை மத்திய மாவட்டத்தில் இருந்து அதிநவீன உயர் நீட்டிப்பு ஏணியை கொண்ட தீயணைப்பு மீட்பு எந்திர வாகனத்தின் மூலம் கோபுரங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் சுத்தம் செய்யும் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று 2-ம் நாளாக ராஜகோபுரம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
தீயணைப்பு வீரர்கள் நவீன எந்திர வாகனத்தின் மூலம் ராஜகோபுரத்தின் உச்சி வரை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
இந்த பணியினை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டும், செல்போனில் வீடியோ எடுத்து ரசித்து பார்த்தனர்.