2-வது நாளாக பாதாள சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய கழிவுநீர்
வேலூரில் 2-வது நாளாக பாதாள சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது.
வேலூரில் 2-வது நாளாக பாதாள சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது.
வெளியேறிய கழிவுநீர்
வேலூரில் நேற்று மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தநிலையில் வேலூர்- காட்பாடி சாலையில் நேஷனல் தியேட்டர் பகுதி வழியாக செல்லும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே சாலையின் நடுவே இருந்த குழாய் மூடி வழியாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறியது. அந்தநீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
துர்நாற்றம்
இந்தநிலையில் இன்றும் பலத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் இருந்து மூடி வழியாக 2-வது நாளாக கழிவுநீர் வெளியேறியது. மழைநீர் கழிவுநீருடன் கலந்து சென்றதால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நடந்து செல்பவர்களின் கால்களை கழிவுநீர் நனைத்தது. அவர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழாமல் இருப்பதற்கான அங்கு பேரி கார்டுகள் வைக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ்கள் போன்ற பெரிய வாகனங்களை பழைய பைபாஸ் சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.
பாதாள சாக்கடை குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.