2-வது திருமணம் செய்த பெண் தூக்கில் பிணம்


2-வது திருமணம் செய்த பெண் தூக்கில் பிணம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே 2-வது திருமணம் செய்த பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

கடலூர்

அண்ணாமலை நகர்:

மயிலாடுதுறை மாவட்டம் மா.படுகை கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 39). இவருடைய முதல் கணவர் இறந்து விட்டார். இதனால் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மணிகண்டன் சென்னையில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திலகவதி அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், திலகவதியின் தாய் அம்பிகாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அம்பிகா மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பாா்த்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த திலகவதியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இதுகுறித்து அவருடைய தாய் அம்பிகா அண்ணாமலைநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திலகவதிக்கு திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் இறந்தாரா? என சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story