2-வது கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு


2-வது கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

நீலகிரி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் 2-வது கட்டமாக பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

2-வது கட்ட கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கும் முன்பும், அதன் பின்பும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடலூர் பகுதியில் கோடை காலம் முடிவடைய உள்ளது.

இதனால் கடந்த 22-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் மண்டல வனச்சரக பகுதியில் முதற்கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனச்சரகங்களான சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரகம் பகுதியில் பருவமழைக்கு முன் தாவர உண்ணி, ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

இன்று தொடங்குகிறது

இதையொட்டி முதுமலை தெப்பக்காடு வன உயிரின மேலாண்மை மையத்தில் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மொத்தம் 34 நேர்கோடுகளில் கணக்கெடுத்தல், மாமிச மற்றும் தாவர உண்ணிகளை காணுதல், கால் தடங்கள் மற்றும் அதன் எச்சங்கள் மூலம் அடையாளம் கண்டு கணக்கெடுத்தல் ஆகிய பணிகளுக்கு வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கணக்கெடுப்பு பணி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் செய்துள்ளனர்.


Next Story