2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல்


2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல்
x

திம்மணநல்லூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் 77.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திண்டுக்கல்

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது வார்டு கவுன்சிலர், முன்னிலைக்கோட்டை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், சிவஞானபுரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், மட்டப்பாறை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், ஐ.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், திம்மணநல்லூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், தும்மலப்பட்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர், குளத்துப்பட்டி 1-வது வார்டு உறுப்பினர் என மொத்தம் 8 பதவிகள் காலியாக இருந்தன.

இந்த 8 பதவிகளுக்கும் மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து பரிசீலனையின் போது 4 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 7 பேர் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தின் 15-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வாக்குப்பதிவு

இதில் திம்மணநல்லூர் ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விக்னேஸ்வரன், மகேஷ்வரி ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து அதற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 591 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மணியக்காரன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி காலை 7 மணிக்கே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர். பின்னர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மொத்தம் 458 பேர் வாக்களித்தனர். அதன்மூலம் 77.49 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கிடையே தேர்தல் அலுவலரும் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருமான இளையராஜா வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் வாக்குப்பெட்டி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்புடன் தனிஅறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதையடுத்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


Next Story