2-ம் ஆண்டு வகுப்பு தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
2-ம் ஆண்டு வகுப்பு
ராமநாதபுரத்தில்ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.345 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கும் இந்த கல்லூரியில் தனித்தளத்தில் அவர்களுக்கான பேராசிரியர்கள் மூலம் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் முடிவடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. முன்னதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியை ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தனர். மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றை ஆய்வு செய்து 2-ம் ஆண்டு கல்வியை தொடங்க அதற்கான கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்டவை முழு அளவில் தயாராக உள்ளதா என்று ஆய்வு செய்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை
தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. இதுதவிர, கல்லூரியில் இந்த ஆண்டிற்கான முதலாம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கப்பட உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி கவுன்சிலிங் மூலம் ராமநாதபுரம் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது.
நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். தற்போது 850 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடத்தில் 500 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஆயிரத்து 350 உள்நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும்.
கட்டிட பணிகள்
இந்த கட்டிட பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும். பணிகள் முடிவடைந்துவிட்டால் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ வசதி கிடைக்கும். இதற்கேற்ப அனைத்து துறை வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்தில் இந்த பணிகள் முடிவடைந்துவிடும்.
இதன்மூலம் அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த தகவலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.