2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம் விக்டரி பள்ளியில் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
பனைக்குளம்.
ராமநாதபுரம் சேதுபதி நகரில் 5-வது தெருவில் விக்டரி அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 4-வது ஆண்டு விழா நடத்திட பள்ளியின் தாளாளர் ஜி.எம்.முரளி மற்றும் மாலதி முரளி ஆகியோர் ஏற்பாட்டின் படி பள்ளி வளாகத்தில் விழா நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் ஜி.முனியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.விஜய் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பள்ளியின் சிறப்பு குறித்தும் ஆசிரியர், ஆசிரியைகள் குறித்தும் நீண்ட நேரம் விரிவாக பேசினார். அப்போது அவர் பேசும்போது, பள்ளியில் மாணவர்களின் தனி திறமைகளை அறிந்து நான் அவர்களை இந்த நேரத்தில் பாராட்டி வாழ்த்துகிறேன். மேலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுத்து இவர்கள் அனைவரும் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர். இந்த மழலையர் மாணவர்களுக்கு நான் பட்டங்களை வழங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதை தொடர்ந்து விக்டரி பள்ளியின் நிறுவனர் ஜி.முனியசாமி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளியின் முதல்வர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி, கட்டுரை, பேச்சுப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.