கடற்கரையோரம் பழமை வாய்ந்த 3 கற்சிலைகள் கண்டெடுப்பு


கடற்கரையோரம் பழமை வாய்ந்த 3 கற்சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கறையோரம் பழமை வாய்ந்த 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கறையோரம் பழமை வாய்ந்த 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

3 கற்சிலைகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இந்த கிராம மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது கடற்கரையோர பகுதியில் கற்சிலை ஒன்று தென்பட்டதை கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் அடுத்தடுத்து 3 கற்சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 சிலைகளையும் மீட்ட அப்பகுதி மீனவர்கள் இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

2 அடி உயர பெருமாள் சிலை

தகவலின்பேரில் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிலைகளை கைப்பற்றினர். மேலும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சீர்காழி தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து கடற்கரையோரம் மீட்கப்பட்ட 2 அடி உயரம் உள்ள பெருமாள் கற்சிலை, 1 அடி உயரமுள்ள மற்றொரு பெருமாள் சிலை, 1 ½ அடி உயரமுள்ள அம்மன் சிலை ஆகிய மூன்று சிலைகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தாசில்தாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

கலை நயம் மிக்க இந்த 3 சிலைகள் எப்படி தீவு கிராம பகுதிக்கு வந்தது என்பது குறித்து புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 3 சிலைகளும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


Next Story