கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 சிறுவர்கள் கைது
கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் லாஸ்காட் ரோட்டை சேர்ந்தவர் சலேத் ஆண்டனி. இவர் கடந்த 4-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதேபோல கடந்த 6-ந்தேதி பெருமாள்மலையை சேர்ந்த சாதிக் பாட்சாவின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றதாக போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு ஏட்டுக்கள் காசிநாதன், சரவணன், ராமராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள்களை தேடி வந்தனர்.
இதனிடையே பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்ைடயில் ஈடுபட்டனர். அதில் மோட்டார் சைக்கிள்களை திருடியது மதுரை கரிசல்குளத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.