வத்தலக்குண்டு அருகே கண்மாயில் மூழ்கி 3 குழந்தைகள் பலி; பெற்றோர் கதறல்
வத்தலக்குண்டு அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி குழந்தைகள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வத்தலக்குண்டு அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி குழந்தைகள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பள்ளி குழந்தைகள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மலை அடிவாரத்தில் உள்ளது, குன்னத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ராஜா-லட்சுமி தம்பதியின் மகன் கிருத்திக் (வயது 8). அதே ஊரை சேர்ந்த மற்றொரு ராஜா-அன்னக்கிளி ஆகியோரின் மகள் முத்து (8), சந்திரன்-வீரம்மாள் தம்பதியின் மகள் தனலட்சுமி (8). இவர்கள் 3 பேரும் குன்னத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்தநிலையில் நண்பர்களான கிருத்திக், முத்து, தனலட்சுமி ஆகிய 3 பேரும் இன்றுபள்ளி விடுமுறை என்பதால் குன்னத்துப்பட்டி அருகே உள்ள சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றனர். அவர்களுடன் மேலும் 2 சிறுவர்களும் சென்றனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சிவனாண்டி கண்மாய் நிரம்பி ததும்புகிறது.
கண்மாயில் மூழ்கினர்
கண்மாய்க்கு வந்த சிறுவர்-சிறுமிகள் 5 பேரும் கரைப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கிருத்திக், தனலட்சுமி, முத்து ஆகிய 3 பேரும் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் 3 பேரும் கண்மாய் நீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற 2 சிறுவர்களும் அழுதுகொண்டே ஊருக்குள் சென்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ந்துபோன கிராம இளைஞர்கள் சிலர் கண்மாய் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது இளைஞர்கள் கண்மாயில் குதித்து, நீரில் மூழ்கிய 3 குழந்தைகளையும் தேடினர். ஆனால் 3 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துபோனது தெரியவந்தது. இதையடுத்து கண்மாயில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் கரைக்கு கொண்டு வந்தனர்.
பெற்றோர் கதறல்
இதற்கிடையே சம்பவம் நடந்த கண்மாய்க்கு 3 குழந்தைகளின் பெற்றோர்களும் வந்தனர். அப்போது தங்களது பிஞ்சு குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது காண்போரின் கண்களை குளமாக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் நாகசுந்தரம், ஊராட்சி தலைவர் மொக்கயதேவர், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சோகத்தில் கிராமம்
பின்னர் 3 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்மாயில் மூழ்கி 3 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவம் குன்னத்துப்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.