ரூ.3 கோடியில் சாகச சுற்றுலாத் தலம் அமைக்கும் பணி


ரூ.3 கோடியில் சாகச சுற்றுலாத் தலம் அமைக்கும் பணி
x

ஏலகிரி மலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலாத் தளம் அமைக்கும் பணியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

சாகச சுற்றுலாதலம்

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஏலகிரி மலைக்கு வந்தார். இங்கு ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் 7.09 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து படகு இல்லம், இயற்கை பூங்கா. தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் சாகச சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது,

சுற்றுலாத்துறை என்பது சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்ற பல சுற்றுலா பணிகளை சுற்றுலாத்துறை மூலமாக செயல்பட்டுவருகிறது. மேலும் மருத்துவ சுற்றுலா என்று இந்த அரசு அமைந்தவுடனேயே அறிவித்து, மற்ற நாடுகளுக்கும் தெரிவித்து சென்னையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது, இந்த மாநாட்டில் 25 நாடுகள் பங்கேற்றன.

குறைந்த கட்டணத்தில் சென்னை மற்றும் கோவையை போல் எந்த நாட்டிலும் கிடைப்பதில்லை. அதனால் மற்ற நாடுகளில் இருப்பவர்களும் இங்கு வந்து செல்கிறார்கள்.

ஏலகிரி மலையில் சாகச விளையாட்டுகள், வாகனம் நிறுத்துமிடம், நடைபாதை, உணவகம், தங்கும் வசதிகள், மின்விளக்குகள், தொலைநோக்கிகள், இருக்கைகள், போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காகத்தான் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை புரிந்தால் இந்த ஊரில் வேலை வாய்ப்பு இருக்கும்.

அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சட்டமன்றத்தில் ஏலகிரி சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நிலாவூரில் சிறிய படகு இல்லம், சிறிய பூங்கா அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

தாவரவியல் பூங்கா

ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை என்பது பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளாட்சித் துறை போன்ற அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

முதலில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் அளவிற்கு தங்கும் வசதிகள் அமைக்கப்பட வேண்டும், சுற்றுலா பயணிகள் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சுற்றி பார்ப்பதற்கு சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

அடுத்த வருடம் கோடை விழா நடை பெறுவதற்கு வாய்ப்புகளை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராக, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், க.தேவராஜி எம்.எல்.ஏ., ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story