பள்ளி மாணவர்களுக்கான 3½ கோடி புத்தகங்கள் தயார்
பள்ளி மாணவர்களுக்கான 3½ கோடி புத்தகங்கள் தயாராக உள்ளன.
3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள்
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பாடப்புத்தகங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் திண்டுக்கல் ஐ.லியோனி கூறுகையில், 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து சேர்ந்து விட்டது. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காக 10 சதவீதம் தமிழ் நூல்கள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகத்தில் கருணாநிதி
தனியார் பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம் என்பதை பின்பற்றுகிறார்களா? என்பதை ஆய்வு செய்வோம். 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்து பாடம் இடம் பெற்றுள்ளது. அடுத்த தலைமுறையினர் கருணாநிதி பற்றி தெரிந்து கொள்ளவே, அதனை பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளோம். மண்டல வாரியாக புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நடக்கிறதா? என்று ஆய்வு நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் மாதம் முதல்-அமைச்சர், புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுத்து, இந்த கல்வி ஆண்டை தொடங்கி வைக்க இருக்கிறார். அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் படி உயர்கல்வி வரை செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு சுமார் 20 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.