பொய்கை சந்தையில் ரூ.3 கோடிக்கு வியாபாரம்
பொங்கல் பண்டிகையையொட்டி பொய்கை வாரச்சந்தையில் நேற்று ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு குவிந்தன. சுமார் ரூ.3 கோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மாடுகள்
பொய்கை மாட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு உயர்ரக கறவை மாடுகள், நாட்டு மாடுகள் என பல ரகங்களில் கறவை மாடுகளும் மற்றும் வண்டி மாடுகள், ஏர்உழும் மாடுகள், ஆடு, கோழி உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றது. அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, பலமநேர் ஆகிய பகுதிகளில் இருந்து கறவை மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயிகளுக்கு தேவையான மிளகாய் நாற்று, தக்காளி நாற்று உள்ளிட்டவைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த சந்தையில் கறவை மாடுகளும், இறைச்சி மாடுகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்தன. ஆயிரக்கணக்கான மாடுகள் சந்தைக்கு வந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு அதிகளவில் மாடுகளை வாங்கினார்கள்.
ரூ.3 கோடிக்கு வியாபாரம்
இறைச்சிக்காக வாங்கப்பட்ட ஒரு மாட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் உயர்ரக கறவை மாடுகள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நடுத்தர மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுப் பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறுகளை கட்டி அலங்காரம் செய்து மாட்டின் முன் படையல் வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். அதனால் மாடுகளுக்கு பயன்படுத்தும் கயிறுகள், கழுத்தில் கட்டும் கயிறு, மணி மற்றும் சங்குகள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதால் இந்த வாரம் நடந்த பொய்கை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்று இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.