ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
கன்னியாகுமரி

நாகா்கோவில்:

குமரியில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மாங்கோடு மற்றும் புலியூர்சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சத்தில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும் அந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணிகளையும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுயஉதவி குழு கட்டிட பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

வளர்ச்சிப்பணிகள்

இதைத்தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடியில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையையும் பார்வையிட்டேன். மேலும், புலியூர்சாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரு.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story