1,036 பேருக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்


1,036 பேருக்கு ரூ.3¾ கோடியில்   நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
x

1,036 பேருக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

மதுரை


1,036 பேருக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று வழங்கினார்.

மாதிரி பள்ளி

மதுரை வடக்கு தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 1,036 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரத்து 990 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பிர்கா வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செட்டிக்குளம் ஊராட்சி, மதுரை மாநகராட்சி பகுதி அருகில் இருக்கின்ற பெரிய ஊராட்சியாக விளங்குகின்றது. இந்த ஊராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கும், பொதுமக்கள் நலனுக்காக புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

சுகாதார நிலையம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்-அமைச்சர்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படும். தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் கட்டாயம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டார். இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வீரராகவன், மண்டல தலைவர் வாசுகி சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story