ரூ.3½ கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்
சிற்றாறு-2 அணையில் ரூ.3½ கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
சிற்றாறு-2 அணையில் ரூ.3½ கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி துறையின் சார்பில் புதிய சுற்றுலாத் தலங்கள் அமைப்பது குறித்து கலெக்டர் அரவிந்த் சிற்றாறு-2 அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
சிற்றாறு-2 அணையில் சுற்றுலா தொடர்பான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிற்றாறு-2 அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதிய படகு குழாம் அமைத்தல் மற்றும் படகு குழாம் அமைக்கப்படும் இடம், அதற்கான கட்டிட வரைபடம், படகுதளம் அமைக்கும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் தளம் அமைக்கும் இடங்களை பற்றியும் அதனுடைய தன்மைகள் பற்றியும் சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
தீவுகளுக்கு செல்லலாம்
படகு குழாமுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதன் அருகிலேயே சுமார் 2.4 ஏக்கர் பூமியில் கார் பார்க்கிங் அமைக்கும் இடமும் தேர்வு செய்யப்பட்டு அதுவும் ஆய்வு செய்யப்பட்டது. அணையின் மற்றொரு பகுதியில் படகு தளம் அமைத்து சுற்றுலா படகில் செல்வோர்கள் இறங்குவதற்கு வசதியாக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக கூடார சுற்றுலா போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. படகு குழாம் மூலம் சுற்றுலா செல்லும் பயணிகள் அணைப்பகுதிகளில் காணப்படுகின்ற தீவுகளுக்கும் சென்று திரும்பும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறும், அணையில் பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற பூங்காவினையும் பராமரிப்பு மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சிப்பணிகள்
மேலும், சிற்றாறு-2 அணையில் சுமார் ரூ.3½ கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படுவதோடு, படகு குழாம் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
தொடர்ந்து கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் சுற்றுலா அதிகாரிகள் சீதாராமன், சதீஷ்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.