ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்
நிலக்கோட்டை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விசாகன் வழங்கினார்.
நிலக்கோட்டை தாலுகா நூத்தலாபுரம் ஊராட்சி, எஸ்.தும்மலப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 107 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை கலெக்டர் வாங்கி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் 662 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்ட, 316 பேருக்கு இணையவழிப்பட்டா, 40 பேருக்கு உட்பிரிவு பட்டா நகல், சமூக பாதுகாப்புத்திட்டத்தில் நலத்திட்ட உதவிகள், 87 பேருக்கு கல்வி உதவித்தொகை, 5 பேருக்கு தையல் எந்திரம் உள்பட மொத்தம் 1,306 பேருக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விசாகன் வழங்கினார்.
முகாமில் கலெக்டர் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கி கடன் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும், என்றார். இந்த முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரெங்கராஜ், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.