நாகுடி, கரூர் உள்ளிட்ட இடங்களில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது
நாகுடி, கரூர் உள்ளிட்ட இடங்களில் போலி டாக்டர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அதிரடி சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக மருத்துவபடிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்துக்கொண்டு சிலர் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சையை அளித்து வருவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட மருத்துவ குழுவினருடன் தனிப்படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் போலி டாக்டர்களை பிடித்து கைது செய்தனர். அந்த வகையில் நாகுடியில் ஒரு மருந்தகம் பெயரில் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த மதியழகன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து ரூ.31 ஆயிரத்து 230 மற்றும் மருத்துவ உபகரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்டிக்கடையில் மருத்துவம்
கரூரில் மருந்தகத்தில் அலோபதி சிகிச்சை அளித்து வந்த தர்மலிங்கம் (54) என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.26,590 மற்றும் மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் பெட்டிக்கடையில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்று வந்ததோடு சிகிச்சை அளித்து வந்த கருப்பையா (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.3,930 மற்றும் மருத்துவ உபகரணங்களை கைப்பற்றினர்.
செம்பட்டிவிடுதி அருகே மருத்துவ சிகிச்சை அளித்து வந்த ராஜகோபால் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.