3 அடி உயர சமணர் சிலை தாசில்தாரிடம் ஒப்படைப்பு
வேதாரண்யம் அருகே பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கருங்கல்லால் ஆன 3 அடி உயர சமணர் சிலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கருங்கல்லால் ஆன 3 அடி உயர சமணர் சிலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடைந்த நிலையில் கிடந்தது
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் மேற்கில் இரண்டாக உடைந்த சமணர் சிலை கடந்த 17 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள முள்ளியாற்றின் கரையில் கிடந்தது. உடைந்த இந்த சிலையை பொதுமக்கள் குளிக்கும்போது துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஆராய்ச்சி மாணவர்கள் பாதி உடைந்த நிலையில் இருந்த அந்த சிலையை மீட்டனர். அருகில் இருந்த குளத்தில் இருந்து சிலையின் தலைப்பாகம் மீட்கப்பட்டது.
3 அடி உயர சமணர் சிலை
கருங்கல்லால் ஆன 3 அடி உயர அந்த சிலை சமணர் சிலை என்று தெரிய வந்தது. அந்த பகுதி கிராம நிர்வாக உதவியாளர் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை சமய ஆர்வலர்கள் வழிபட்டு சென்றனர்.
இந்த நிலையில் கஜா புயலில் சிலை வைக்கப்பட்டு இருந்த கொட்டகை சேதமடைந்து விட்டது. இதனால் சிலை பாதுகாப்பு இல்லாமல் இருந்தது இந்த நிலையில் இந்த சிலை குறித்து ஆய்வு செய்ய தொடர்ந்து ஆராய்சியாளர்கள் பலர் வந்து இந்த சிலையை ஆராய்ச்சி செய்த வண்ணம் இருந்தனர்.
தாசில்தாரிடம் ஒப்படைப்பு
பாதுகாப்பு மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் சமணர் சிலை இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்திற்கு சிலையை எடுத்து வந்து தாசில்தார் ஜெயசீலனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னர் நாகை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என தாசில்தார் ஜெயசீலன் தெரிவித்தார்