காட்டெருமை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு
கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் 3 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
காட்டெருமை உலா
கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் மிரட்டி வருகிறது. இதனால் பகல், இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டெருமை தாக்கியதில், கொடைக்கானலில் 3 ஆடுகள் உயிரிழந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:
நாயுடுபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் இறைச்சி விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது கடைக்கு அருகே உள்ள புல்வெளியில் 3 ஆடுகளை மேயவிட்டிருந்தார்.
3 ஆடுகள் உயிரிழப்பு
நள்ளிரவு அங்கு வந்த காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கொம்பால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த 3 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. நேற்று காலையில் கடைக்கு வந்த முருகன் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு அவர் தகவல் ெகாடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆடுகளின் உடல்களை பரிசோதனைக்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர். காட்டெருமை தாக்கி ஆடுகள் இறந்தது தெரியவந்தால் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.
இதற்கிடையே நேற்று பகல் நேரத்தில் நாயுடுபுரம் சாலையில் டெப்போ பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதை பார்த்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் காட்டெருமை சுற்றித் திரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.