3 வீடுகள் இடிந்து விழுந்தது
கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று கோடநாடு கிராமத்தில் ஆறுமுகம் என்பவரது வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் நேதாஜி நகரை சேர்ந்த தவமணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதே போல ஓம் நகரை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரது வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க பரிந்துரை செய்தனர்.
மரம் விழுந்தது
கோத்தகிரி அருகே இந்திரா நகர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மரம் வெட்டி அகற்றப்பட்ட பின்னர், போக்குவரத்து சீரானது. நேற்று மதியம் வரை மழை விட்டு விட்டு பெய்தது. மதியத்திற்கு பின் சற்று குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 25.3 மில்லி மீட்டர், கோடநாட்டில் 24 மில்லி மீட்டர், கீழ் கோத்தகிரியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சாலைகளில் மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க கோத்தகிரி நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு பொக்லைன் எந்திரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை பெய்து வருவதால், கடும் குளிரான சீதோஷ்ண காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டியில் மழை குறைந்து உள்ளது. இதமான காலநிலையில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.