கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

கள்ளக்காதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முருகக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 29). இவர், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நாட்டாப்பாளையம் பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது, அருகில் உள்ள ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட சென்றபோது, அங்கு திருமணம் ஆன பிரியங்கா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதுபற்றி அறிந்த பிரியங்காவின் கணவர் சரத்குமார் (26), தனது மனைவி மற்றும் பார்த்தீபனை கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் ஜோடி தங்களது உறவை கைவிடவில்லை. இதனால் சங்ககிரி புதுவளவு பிரிவு ரோட்டிற்கு சரத்குமார் தனது வீட்டை மாற்றி அங்கு மனைவியுடன் வசித்து வந்தார்.

வாலிபர் கொலை

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கள்ளக்காதலி பிரியங்காவின் வீட்டுக்கு பார்த்தீபன் சென்று அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சரத்குமார் மற்றும் அவரது மாமனார் தங்கவேல் (49) மற்றும் மைத்துனர் நந்தகுமார் (24) ஆகியோர் பார்த்தீபனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு அவரை விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பார்த்தீபனை கொலை செய்த சரத்குமார், தங்கவேல், நந்தகுமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரைராஜ் ஆஜரானார்.


Next Story