பாலமேடு பகுதியில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருட்டு- போலீசில் புகார்


பாலமேடு பகுதியில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருட்டு- போலீசில் புகார்
x

பாலமேடு பகுதியில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருடு போனது. இது தொடர்பாக காளை உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

மதுரை

அலங்காநல்லூர்

பாலமேடு பகுதியில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருடு போனது. இது தொடர்பாக காளை உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

3 காளைகள் திருட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டியின் ஜல்லிக்கட்டு காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை ஆகிய 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில் காணாமல் போய்விட்டது.

இது குறித்து காளைகளின் உரிமையாளர்கள் பாலமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் பாலமேடு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா

சாலையோரமாக வீட்டில் கட்டியிருக்கும் காளைகளை ஆசாமிகள் கயிற்றை அறுத்து விட்டு காளைகளை பிடித்து சென்றுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இந்தப் பகுதியில் சென்றுள்ளதாகவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இதே வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் மாவட்ட பகுதியில் இரவில் காளைகளை பிடித்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருடப்பட்ட சம்பவம் காளை வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் சுதாரிப்புடன் தங்களது காளைகளை இரவு, பகலாக கண்காணிக்க தொடங்கி விட்டனர்.


Next Story