3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி,
இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அடித்து கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு கவின் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவரது மகன்கள் புவனேஷ்வரன் (28), சதீஷ் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
26.8.2018-ந் தேதி மகேந்திரன் எஸ்.கைகாட்டி பகுதிக்கு சென்றார். அங்கு புவனேஷ்வரன், சதீஷ் மற்றும் அவர்களது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ் (30) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும், மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேந்திரன், சதீசின் தாயை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் உள்பட 3 வாலிபர்களும் இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளியை கொலை செய்த சகோதரர்களான சதீஷ், புவனேஸ்வரன், மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல்கள் ஆனந்த், முகமது ரபீக் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.