கடத்தப்பட்ட 3 பேர் கொடைக்கானலில் மீட்பு;7 பேர் கைது
வத்திராயிருப்பு அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட 3 பேரை கொடைக்கானலில் மீட்ட போலீசார் இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட 3 பேரை கொடைக்கானலில் மீட்ட போலீசார் இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.
பண பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜாபர்அலி (வயது 48). ராஜபாளையம் சோமையாபுரத்தை சேர்ந்தவர்கள் கண்ணபிரான் (44), மாரிமுத்து (45). இவர்கள் 3 பேரும் வியாபாரத்திற்காக கூமாபட்டியை சேர்ந்த அப்துல் கனி (44) என்பவரிடம் ரூ. 40 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.
அப்துல்கனியும், பிரகதீஸ்வரன் என்பவரும் சேர்ந்து பணம் கொடுத்ததாக ெதரிகிறது. திருப்பி கேட்ட போது பணத்தை அவர்கள் கொடுக்காமல் அதற்கு காசோலை மற்றும் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கடத்தல்
இந்தநிலையில் ஜாபர் அலி, கண்ணபிரான், மாரிமுத்து ஆகிய 3 பேரும் 2 கார்களில் கடத்தப்பட்டதாக ஜாபர் அலியின் உறவினர் செய்யது இப்ராஹிம் கூமாபட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
மேலும் அவரை ஜாபர்அலி தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் தயார் செய்து வைத்திருக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கூமாபட்டி போலீசார், செய்யது இப்ராஹிம் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, கடத்தப்பட்ட 3 பேரும் கொடைக்கானலில் இருப்பது தெரியவந்தது.
7 பேர் கைது
போலீசார் கொடைக்கானலுக்கு சென்று அவர்கள் 3 பேரை மீட்டதுடன் அவர்களை கடத்தியதாக அப்துல் கனி, அவரது நண்பர் பிரகதீஸ்வரன் (40), செந்தில்குமார் (40), கார் டிரைவர்கள் திருமலை குமார் (28), பாபு (35), நிரஞ்சன் (40), ரமேஷ் (30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அப்துல்கனி கூமாபட்டியை சேர்ந்தவர். மற்ற 6 பேரும் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.